ரஷ்யாவின் கிழக்குப் பகுதியில் உள்ள கம்சட்கா தீபகற்பத்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதன் அளவு 6.9 ஆகப் பதிவானதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. உடனடியாக உயிரிழப்பு அல்லது பொருட்சேதம் குறித்த தகவல்கள் வெளியாகவில்லை.
கம்சட்கா தீபகற்பத்தின் தென்முனைக்கு அருகே, ஒஸெர்னோவ்ஸ்கி குடியிருப்பிலிருந்து வடகிழக்கே சுமார் 76 கிலோமீட்டர் தொலைவில் நிலநடுக்கம் மையம் கொண்டிருந்தது. இந்திய நேரப்படி காலை 9.05 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது. பூமிக்கு அடியில் சுமார் 140 கிலோமீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் உருவானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.ஐரோப்பிய–மத்திய தரைக்கடல் நில அதிர்வு மையம், நிலநடுக்கத்தின் அளவை முதற்கட்டமாக 7.0 என மதிப்பிட்டது. அதன் ஆழம் 140 கிலோமீட்டர் என்று அந்த மையமும் தெரிவித்துள்ளது. இதனால், வெவ்வேறு ஆய்வு அமைப்புகளின் முதற்கட்ட மதிப்பீடுகளில் சிறிய வேறுபாடு காணப்படுகிறது.
இந்த நிலநடுக்கத்தால் சுனாமி ஏற்படும் அபாயம் இல்லை என அமெரிக்க சுனாமி எச்சரிக்கை அமைப்பு தெரிவித்துள்ளது. நிலநடுக்கம் அதிக ஆழத்தில் ஏற்பட்டுள்ள நிலையில், சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை.
இதனிடையே, இந்த நிலநடுக்கத்தைத் தொடர்ந்து ஜப்பானில் 9.9 அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதாகத் தவறான முன்னெச்சரிக்கை வெளியானது. பின்னர் அந்த எச்சரிக்கை திரும்பப் பெறப்பட்டது. நிலநடுக்கத்தின் அளவு மிகையாகக் கணிக்கப்பட்டதாக ஜப்பான் வானிலை ஆய்வு அமைப்பு விளக்கமளித்துள்ளது. ஜப்பானில் இந்த நிலநடுக்கத்தால் அதிர்வு உணரப்படவில்லை என்றும், சுனாமி எச்சரிக்கை விடுக்கப்படவில்லை என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.